காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திலும் பல மடங்கு திட்ட மதிப்பீட்டை உயர்த்தி ஊழல் செய்தார்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கே.எஸ்.அழகிரி அளித்திருக்கிறார் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
ரயில்வே திட்டங்களில் வட மாநிலங்களுக்கு சாதகமாகவும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் மத்திய பா.ஜ.க அரசு செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்தார். ராமேஸ்வரம் -தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் 2006-07ல் தொடங்கப்பட்டு, ரூபாய் 11,400 கோடி நிதி தேவை என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டில் ரூபாய் 211 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் ரூபாய் 1000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 15 ஆண்டுகாலமாக இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் முடங்கி கிடக்கிறது எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில்பாதை திட்டம் 2006-07ல் துவக்கப்பட்டு, 11400 கோடி ரூபாய் நிதி தேவை என அறிவிக்கப்பட்டது என்றும், 2020ஆம் ஆண்டில் 211 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டது என்றும், 2023-24ம் ஆண்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி. அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்பதையெல்லாம் பின்தள்ளி காங்கிரஸ் புளுகு என்பதே உயர்ந்தது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதோடு, காங்கிரஸ் ஊழலில் எப்படி ஊறி திளைத்தது என்பதை ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
முதலில், 2006-2007ல் இது போன்ற ஒரு திட்டத்தை அறிவிக்காததோடு, நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 15/12/2011 அன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அன்றைய திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு அவர்களின் கேள்விக்கு (கேள்வி எண்.3520) ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில்பாதை குறித்து ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அது குறித்த அறிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் முனியப்பா கூறியுள்ளார். ஆய்வே முடியாத நிலையில், நான்கு வருடங்களுக்கு முன்னரே 11,400 கோடி ரூபாய் ஒதுக்கியது எப்படி என்ற மர்மத்தை/ரகசியத்தை கே.எஸ்.அழகிரி விளக்க வேண்டும்.
மேலும், இந்தியாவில் ஒரு கிலோமீட்டர் ரயில்பாதை அமைக்க ரூபாய் 8 கோடி மட்டுமே செலவாகும் என்பது உலகறிந்தது. ஆனால், தனுஷ்கோடி போன்று கடல் மேல் பாலத்தில் அமைப்பதாக இருந்தால் கிலோமீட்டர் ஒன்றுக்கு ரூபாய் 40 கோடி ரூபாய் செலவாகும் என்கிற நிலையில் வெறும் 18 கிலோமீட்டர் மட்டுமே உள்ள இந்த பாதைக்கு அதிக பட்சம் 720 கோடி மட்டுமே செலவாகும். சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் 500 கோடி மட்டுமே செலவாகியிருக்கும். ஆனால், காங்கிரஸ் அரசு 11,400 கோடி ஒதுக்கியது ஏன்? என்பதை அழகிரி விளக்க வேண்டும். இப்படி தான் ஒவ்வொரு திட்டத்திலும் பல மடங்கு உயர்த்தி ஊழல் செய்தார்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அழகிரி அளித்திருக்கிறார். மக்கள் நல திட்டங்களில் பல லட்சம் கோடிகளை ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி விழுங்கியது எப்படி என்பதற்கு சிறந்த உதாரணத்தை அழகிரி மக்கள் முன் வைத்திருக்கிறார். நல்லவேளை, காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை செய்லபடுத்தவில்லை; இல்லையெனில் 10,000 கோடிக்கும் அதிகமான ஊழல் நடைபெற்றிருக்கும். 720-800 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடி- ராமேஸ்வரம் ரயில்பாதை விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.