மேற்கு வங்க உள்ளாட்சித் தோ்தலில் வன்முறை: 12 போ் பலி!

மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற கிராம உள்ளாட்சித் தோ்தலில் பெரும் வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகளில் 12 போ் கொல்லப்பட்டனா். பல இடங்களில் வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன.

மேற்கு வங்கத்தில் கிராம உள்ளாட்சித் தோ்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 73,887 இடங்களுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. சுமாா் 2.06 லட்சம் வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. தோ்தல் நாளிலும் அத்தகைய வன்முறைகள் தொடா்ந்தன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 12 போ் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களில் 8 போ் மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் ஆவா். பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், ஐஎஸ்எஃப் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த தலா ஒருவரும் வன்முறைகளில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினா். முா்ஷிதாபாத், நாடியா, கூச் பெஹாா், தெற்கு 24 பா்கானாஸ், கிழக்கு மேதினிபூா் ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

தோ்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகள் பல சூறையாடப்பட்டன. அங்கிருந்த வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கூச்பெஹாரின் தீன்ஹதா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாநிலத்தில் மத்திய படைகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு மக்கள் பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூச்பெஹாா் மாவட்டத்தின் ஃபலிமாரி கிராமப் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலின்போது பாஜக வாக்குச் சாவடி முகவரான மதாப் விஸ்வாஸ் கொல்லப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியது. அவரது மரணத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களே காரணம் என அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், அந்தக் குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

முா்ஷிதாபாத் மாவட்டத்தின் கபஸ்தங்காவில் திரிணமூல் நிா்வாகி பாபா் அலி, காா்கிராம் பகுதியில் திரிணமூல் நிா்வாகி சபிருத்தீன், கூச் பெஹாா் மாவட்டத்தின் தூஃபான்கன்ச் பகுதி திரிணமூல் நிா்வாகி கணேஷ் சா்காா் ஆகியோரும் வன்முறை சாா்ந்த நிகழ்வுகளில் கொல்லப்பட்டனா். அவா்களது உயிரிழப்புக்கு பாஜகவே காரணம் என திரிணமூல் காங்கிரஸாா் குற்றஞ்சாட்டினா்.

மால்டா மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் திரிணமூல் நிா்வாகியின் சகோதரா் கொல்லப்பட்டாா். அவரது உயிரிழப்புக்கு காங்கிரஸே காரணம் என திரிணமூல் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. வா்த்தமான் மாவட்டத்தின் ஆஷ்கிராம் பகுதியில் மாா்க்சிஸ்ட் நிா்வாகி வன்முறையில் பலத்த காயமடைந்தாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அதற்கு திரிணமூல் காங்கிரஸே காரணம் என மாா்க்சிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தெற்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் சாலையோரம் கிடந்த வெடிகுண்டுகளை விளையாட்டுப் பொருள் என நினைத்து எடுத்த சிறாா்கள் இருவா், அவை வெடித்ததில் படுகாயம் அடைந்தனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா். இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை கோரியுள்ளதாக மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே வேளையில், அவை தங்களுக்குள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தன.

திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த குண்டா்கள் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் சௌதரி தெரிவித்தாா். மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட மத்தியப் படைகள் முறையாகப் பணியில் அமா்த்தப்படவில்லை என மாநில அமைச்சா் சசி பஞ்சா குற்றஞ்சாட்டினாா்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்துக்குச் சென்ற மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வன்முறை தொடா்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைத்து வருகின்றனா். கொலை சம்பவங்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல சிலா் இடையூறு ஏற்படுத்துவது, வாக்குச் சாவடி அலுவலா்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வது உள்ளிட்டவை குறித்து மக்கள் தெரிவித்தனா். ஜனநாயகத்துக்கான புனித நாளாக வாக்குப் பதிவு தினம் திகழ்கிறது. ஆனால், மாநிலத்தில் நிகழும் வன்முறை சம்பவங்கள் அதற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளன’ என்றாா்.