கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பின்னர் தனது உத்தரவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென்று 7 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். தமிழக அரசுடன் உள்ள மோதல் போக்கு, செந்தில் பாலாஜி பதவி நீக்கம் பற்றிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கவர்னருக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு 08.07.2023 அன்று கடிதம் எழுதியுள்ளார். இப்பொருள் குறித்த தனது 10-1-2023 நாளிட்ட கடிதத்தினை 12-1-2023 அன்று புதுதில்லியில், தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளித்ததை நினைவுகூர்வதாகவும், அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து தற்போது மாண்புமிகு குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் நிருவாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இருப்பினும், பெயரளவில் மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.