ஜூலை 15 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் முன்பு பெண்களை திரட்டி மதுபான பாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேறறவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் உரிமைத் தொகை ரூ 1000 வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்கள். இது பெண்களை ஏமாற்றும் செய்ல். ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் தலைவிகளுக்கு உரிமை தொகை கிடையாது என கூறியுள்ளது. அப்படி பார்த்தால் 99 சதவீதம் பெண்களுக்கு உரிமை தொகையே கிடைக்காது. அவசர கதியில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அன்று அனைத்து பெண்களுக்கும் என கூறிவிட்டு இன்று சொன்னதை செய்ய மாட்டோம் என சொல்லாமல் சொல்கிறது திமுக.
பெண்களின் மிகப்பெரிய ஆயுதமே கண்ணீரும் மவுனமும்தான். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அது எதிரொலிக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதற்கு எதிராக புதிய தமிழகம் கட்சி மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும். திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்களின் நலன் காவு வாங்கப்படுகிறது. கச்சத்தீவு, காவிரி நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளில் திமுக சரியாக செயல்படவில்லை. காவிரி நீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் வேண்டும் என்பதற்காக கர்நாடகா காங்கிரஸுக்கு திமுக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. திமுக சுயநலமாக செயல்படுகிறது. 6 ஆம் தேதி தொடங்கி தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பூரண மது விலக்கு அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. ஜூலை 15 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் முன்பு பெண்களை திரட்டி மதுபான பாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.