எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரூரில் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் மையத்தை திறந்துவைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பின்னர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வோரை உற்சாகப்படுத்தும் பணியாக ஹெல்த்வாக் எனப்படும் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபாதை சாலை அமைக்கும் பணி விரைவில் முதல்வரால் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
தமிழகத்தில் முதுகலை படிப்பில் சேர புதிய உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை .கடந்த கால நடைமுறைகளே தொடர்கிறது. தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்கள் மற்றும் தமிழகத்திலோ அல்லது வெளியிலோ இன்டன் சீப் காலம் உள்பட எம்.பி.பி. எஸ்., பி.டி.எஸ், முடித்தவர்கள், அரசு மற்றும் சுயநிதி நிறுவனங்களின் நேட்டிவிட்டி சான்றுகளுடன் அரசு ஒதுக்கீட்டில் முதுகலை இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்பதுதான் அமுலில் உள்ளது. பிற மாநிலங்களை பூர்விகமாகக் கொண்டு, தமிழகத்தில் இன்டன்சிப் காலம் உள்பட எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முடித்தவர்கள் திறந்த வகை (ஓபன் காம்பிடிஷன்) அரசு ஒதுக்கீடு முதுகலை இடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்.
இந்தியாவிலேயே முதல் முறையாக உடல் உறுப்பு மாற்று ஆணையம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த 2 வருடங்களுக்கு முன்பு வரை உடல் உறுப்பு தானம் பெறுவது தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லுாரியில் 11 மருத்துவமனைகளில் மட்டுமே லைசன்ஸ் இருந்தது. தற்போது முதல்வர் அவர்களால் தருமபுரி உட்பட 36 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கும் லைசன்ஸ் பெறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காப்பீட்டுத் தொகையாக ரூ.40 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 20 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. இதில் 1,021 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு 25 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இன்னும் 25 நாட்களில் முதல்வர் மூலம் பணி ஆணை வழங்கப்படவுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பை பொறுத்தவரை கடந்த ஆண்டு 36 ஆயிரத்து 206 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு பதிவு செய்திருப்பவர்கள் 39 ஆயிரத்து 924. இதில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி 32 ஆயிரத்து 649 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கடைசிநாள் 10 ந்தேதி (இன்று) என்றிருந்தது. விண்ணப்பிக்காதவர்களது பெற்றோா்களின் வேண்டுகோளின்படி மேலும் 2 நாட்கள் நீட்டித்து வரும் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் பட்டியல் வரும் 16 ந்தேதி சென்னையில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.