தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?: எஸ்.வி. சேகருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது உள்ளிட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு நடிகர் எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு குட்டு வைக்கும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

நடிகர் எஸ்.வி. சேகர் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சில காலம் செயல்பட்டு வந்தார். எனினும், அவருக்கு கட்சித் தலைமை முக்கிய பொறுப்புகளை எதையும் கொடுக்காமல் இருந்தது. இதனால் அவ்வப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார் எஸ்.வி. சேகர். “எனக்கு பொறுப்பு கொடுத்தா அது கட்சிக்குதான் நல்லது. இல்லனா எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது” எனக் கூறி வந்தார் எஸ்.வி. சேகர். ஆனாலும், அவரது பேச்சை பாஜக பொருப்படுத்தவில்லை. இதனால் பொங்கியெழுந்த எஸ்.வி. சேகர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். கட்சியில் உள்ள பிராமணர்களுக்கு எதிராக அண்ணாமலை செயல்படுவதாக கூறி அண்மையில் பாஜகவில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் அறிவித்தார். மேலும், பிராணர்களுக்காக தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் மோசமான கருத்துகளை எஸ்.வி. சேகர் கூறினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல, தேசியக் கொடியை அவமதித்தாக எஸ்.வி. சேகர் மீது மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும், எனவே தன் மீதான வழக்குகளை ரத்து செய்துவிடும்படியும் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கானது உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “தவறான, அவதூறான கருத்து கூறிவிட்டு உடனே மன்னிப்பு கேட்டுவிட்டால் தனது செயல்பாடுகளில் தவறில்லை என்றாகிவிடுமா?” எனக் கேள்வியெழுப்பினார். பின்னர் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.