காவிரி நீரை பெற்று குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பெற வேண்டிய காவிரி நீர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவிட வேண்டும். காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கர்நாடக துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி ஆகியோர் காவிரி நீர் விவகாரத்தில், மேகதாது அணைப் பிரச்சினையில், தமிழகத்துக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற வேளையில் தமிழக தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் யார் பக்கம். கர்நாடக காங்கிரஸ் பக்கமா அல்லது தமிழக விவசாயிகள் பக்கமா. அதாவது கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும். எனவே காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் அத்துமீறிய பேச்சை, செயலை கண்டித்து, ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.