டெல்லியில் நீடிக்கும் கனமழையால் யமுனை நதியில் வரலாறு காணாத வெள்ளம்!

கனமழை நீடிப்பதால் டெல்லியில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆறு அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் யாரும் யமுனை ஆற்றங்கரைக்கு செல்லக்கூடாது என 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை வட இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 67 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை டெல்லியில் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மழை பாதிப்பு தொடர்பான அவசரக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், அனைத்து மீட்பு நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

டெல்லியில் நீடிக்கும் பெருமழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து உபரி நீரை யமுனை ஆற்றில் ஹரியானா திறந்து விட்டது. ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீரை ஹரியானா திறந்து விட்ட நிலையில், யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக யமுனை நதியில் 352 கன அடி திறந்து விடப்படும் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தண்ணீர் திறந்து விடும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா தெரிவித்துள்ளது. யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நதியின் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். யமுனை நதியில் நீர் மட்டத்தை கண்காணிக்கவும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளை கண்காணிக்கவும் 16 கட்டுப்பாட்டு அறைகளை டெல்லி அரசு ஏற்படுத்தியுள்ளது. யமுனை ஆற்றில் 207.55 மீட்டர் அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டெல்லி நகருக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதால் டெல்லிவாசிகள் அச்சமடைந்துள்ளனர். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வெளியே நடமாடி வருகின்றனர். பலர் வெள்ள நீரில் குளித்து விளையாடுவதோடு செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். இந்த நிலையில் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களும் டெல்லி வாசிகளும் யமுனை ஆற்றங்கரையோரங்களிலும் வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளுக்கும் செல்லக்கூடாது என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. யமுனை ஆறு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.