மோடியை கருத்தியல் ரீதியாக இந்தியாவில் எதிர்க்கும் ஒரே கட்சி திமுக மட்டும்தான் என்று திமுக எம்.பி.ராசா பேசியுள்ளார்.
கும்பகோணம் மாநகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பேசியதாவது:-
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா வைப்பது குறித்து விமர்சனங்கள் எழுப்புகின்றனர். கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் பெண்கள் முன்னேற்றம், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், மாற்றுத் திறனாளிகளுக்கு போன்ற பொது மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டதால்தான், அவரது நினைவாக பேனா வைக்கின்றோம். ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி, கருணாநிதிக்கு பேனா சின்னம் ஏன் வைக்க வேண்டும் என்கிறார். கருணாநிதியின் பேனா இல்லை என்றால் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வர் கிடையாது. அடையாளம் இல்லாத ஜெயலலிதாவுக்கு ரூ.35 கோடியில் நினைவகம் வைத்துள்ளார்கள். 100 அடையாளங்களுடன் வாழ்ந்த கருணாநிதிக்கு பேனா சின்னம் வைப்பதற்குக் கேள்வி கேட்கிறார்.
அதானியை பல நாடுகளுக்கு ஒப்பந்தம் போடுவதற்காக பிரதமர் அழைத்துச் செல்கிறார். இதனால், அவரது சொத்துக்கள் பலமடங்கு உயர்ந்து விட்டது. பிரதமர் மோடி மற்றும் அதானி மீது குறித்து நாடாளுமன்றத்திலேயே விமர்சனங்களை நான் எழுப்பினேன். ஆனால், பிரதமர் மோடி இதுவரை பதில் கூறவில்லை. இதேபோல் அவரை கருத்தியல் ரீதியாக இந்தியாவில் எதிர்க்கும் ஒரே கட்சி திமுக மட்டும்தான்.
தமிழக ஆளுநர் இங்கு நடந்து வரும் ஆட்சி குறித்து பேசுகிறார். ஆனால், மணிப்பூரில் உள்ள அம்மாநில ஆளுநரை, நிர்வாகம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி ஏன் சொல்லவில்லை? அங்கு முதலமைச்சரே வெளியில் வர முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகவுள்ளது. ஆனால், அந்த மாநில ஆளுநர் வாய்மூடி மௌனமாக உள்ளார். அங்கு ஒன்றும் செய்ய முடியவில்லை, இங்கு என்ன செய்ய முடியும்? பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மோடியைப் பார்த்து பயப்படும் நிலையில், அவரது தவறுகளை சுட்டிக்காட்டி திமுக மட்டும்தான் எதிர்த்துப் பேசுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.