சிதம்பரம் கோயில் வருமானத்தை தீட்சிதர்கள் 400 பேர் மட்டும் பகிர்ந்து கொள்வதா: சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானத்தை தீட்சிதர்களின் குடும்பங்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளலாமா? என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேள்வியெழுப்பியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்களை அங்குள்ள தீட்சிதர்கள் தாக்குவதாக அண்மையில் புகார் வந்தது. அதேபோல, கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய, பக்தர்களிடம் சிறப்புக் கட்டணத்தை தீட்சிதர்கள் கேட்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட இந்து சமய அறநிலையத்துறை, கனகசபை மீது பக்தர்கள் ஏறுவதற்கு எந்தவித கட்டணமும் கேட்கக்கூடாது என உத்தரவிட்டது. அதேபோல, சிதம்பரம் நடராஜர் கோயிலை தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர முயற்சி எடுத்து வரும் தமிழக அரசு, இந்தக் கோயிலில் வருமானத்தை கணக்கு காட்டவும் தீட்சிதர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதற்கு தீட்சிதர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படி, எந்தவொரு கோயில்களில் இருந்தும் புகார்கள் வந்தால் அதை நேரடியாக சென்று விசாரிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் உண்டு. புகாரின் அடிப்படையில் எந்தக் கோயில்களுக்கு சென்று வேண்டுமானாலும், கணக்கு கேட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திலேயே இது தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியை பொறுத்தவரை, பக்தர்களிடம் இருந்து பெறப்படும் காணிக்கைகள் அந்த திருக்கோயிலின் வளர்ச்சிக்காகவும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. 400 பேர் வாழ வேண்டும் என சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சொல்வதற்கு, இது தீட்சிதர்களால் கட்டப்பட்ட கோயில் அல்ல. தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். ஆகவே, இந்த கோயிலுக்கு பக்தர்கள் தரும் வருமானத்தை 400 பேர் மட்டும் பகிர்ந்து கொள்வதை இந்து சமய அறநிலையத்துறை வேடிக்கை பார்க்காது.

மக்களுடைய ஒட்டுமொத்த பிரதிநிதிதான் அரசு. மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட அரசுதான் இன்றைக்கு தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. மக்களிடம் கணக்கு வழக்குகளை காட்ட தயாராக இருக்கும் தீட்சிதர்கள், ஏன் அரசாங்கத்திடம் அதை காட்ட மறுக்கிறார்கள் என்பதில் இருந்தே அவர்களின் சூட்சுமம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வருமான வரித்துறையினரிடம் கணக்கு காட்ட தயாராக இருப்பதாக கூறும் தீட்சிதர்கள், அரசாங்கத்திடம் கணக்கு காட்ட தயங்குவது ஏன்? தாங்கள் செய்யும் தவறுகளை அவர்களாகவே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள். 400 பேர் வாழ வேண்டும் என்கிறார்கள். அரசாங்கம் கேட்டாலே கணக்கு காட்ட மறுப்பவர்கள், மக்கள் கேட்டால் எப்படி காட்டுவார்கள்? இவ்வாறு சேகர்பாபு பேசினார்.