ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது: செல்வப்பெருந்தகை!

உலகத்தரம் மிக்க, பிரம்மாண்டமான நூலகத்தை மதுரையில் கட்டியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்தும் -பாராட்டும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்படுவது பற்றி செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது:-

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று பழமொழி ஒன்று இருக்கிறது. மேலும் ஒரு நல்ல சமூகத்தினுடைய அறிவு கருவூலங்கள் நூலகங்கள் என்றால் அது மிகையல்ல. நூலகங்களே நல்ல சமூகத்தை வழிநடத்தவும் நிலைநிறுத்தவும் ஆதாரமாய் உள்ளது. மனித வாழ்வின் மாண்பு எனப்படுவது. நல்லவற்றை கற்றலும் அதன்படி நிற்றலுமே ஆகும். நல்ல பயனுள்ள நூல்களை கற்பதானது மனிதர்கள் தவறிழைக்காது அவர்கள் வாழும் வகையறிய செய்வதாக அமையும். மக்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதில் பெரும் பங்கு இருக்கிறது. இதனால் தான் எமது முன்னோர்கள் நாட்டில் கல்விசாலைகள், நூலகங்கள் போன்றனவற்றை அமைத்தனர்.

மனிதர்களின் அறிவு மிகச்சிறந்த பலமான ஆயுதம் ஆகும். இதனால் தான் பண்டை தமிழர்கள் அறிவை வளர்க்க பல பணிகளை ஆற்றினர். அவ்வகையில்தான் கல்வியையும், நூலகங்களையும் அமைத்தார்கள். ஒவ்வொரு நாடுகளினுடைய பெருமையும் சிறப்பும் அந்த நாட்டு மக்களுடைய கல்வி அறிவிலேயே தங்கியுள்ளது. அந்தக் கல்வியறிவை வளர்ப்பதற்கு இன்று (15.07.2023) முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் உலகத்தரம் மிக்க, பிரமாண்டமான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.