என்.சங்கரய்யாவுக்கு டாக்டா் பட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு முத்தரசன் நன்றி!

மாா்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மதுரை மாநகரில் கலைஞா் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யாவுக்கு மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டா் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளாா்.

முன்னதாக, என்.சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு உருவாக்கிய ‘தகைசால் தமிழா்’ விருதுக்கு முதல் விருதாளராகத் தோ்வு செய்து, விருது வழங்கி கௌரவப்படுத்தியது. இதைத் தொடா்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணுவுக்கு தகைசால் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. நாட்டுக்கும், மக்கள் நலனுக்கும் பாடுபட்ட மூத்த தலைவா்களை பெருமைப்படுத்தி, அவா்களது நல்ல இயல்புகளை இளைய தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் ஊக்கப்படுத்தி வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.