அமலாக்கத்துறை சார்பில் போகப்போக இன்னும் பல கொடுமைகள் அரங்கேறும்: மு.க.ஸ்டாலின்

அமலாக்கத்துறை சார்பில் போகப்போக இன்னும் பல கொடுமைகள் அரங்கேறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பெங்களூருவில் நடந்த 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயணம் சிறப்பாக இருந்தது. வெற்றிகரமாக அமைந்தது. இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதசார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் நலன் இவையாவும் இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வாதிகாரம், ஒற்றை தன்மை ஏதேச்சதிகாரம், அதிகார குவியலில் சிக்கி இந்த நாடே சிதையுண்டு போய்க்கொண்டு இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் அப்படிப்பட்ட பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இருக்கிறது. பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். பெங்களூரு கூட்டத்தில் 26 கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.

தமிழகத்தில் எப்படி ஒரு கூட்டணி அமைந்து தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறோமோ, அதேபோல இந்தியா முழுமையும் இதுபோல ஒரு கூட்டணி அமைந்து, அந்த வெற்றியை காண வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் கொள்கை கூட்டணியாக, மாநில அளவில் தேர்தல் கூட்டணியாக இது அமையக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பாட்னா, பெங்களூரு கூட்டங்களை பொறுத்தவரையில் எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சி எனக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நிச்சயம் நம்பிக்கை தரும் மகிழ்ச்சியாக அமையும். அதைத்தான் நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அப்படி ஒன்றிணைந்திருக்ககூடிய கூட்டணிக்கு, ‘இந்தியா’ அதாவது ‘இந்தியன் நேஷனல் டெவலப்மெண்டல் இன்கிளூசிவ் அலையன்ஸ்’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

அடுத்த கூட்டம் மும்பையில் நடத்த முடிவு எடுத்திருக்கிறோம். அந்த கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசப்படும். ஆகவே 2024-ம் ஆண்டை பொறுத்தவரையில் ஒரு புதிய இந்தியா உருவாகும். அதற்கு உங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தீர்கள். இந்தமுறையில் அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அன்றைக்கு இருந்த சூழ்நிலையை பொறுத்தவரையில் நான் அப்படி சொன்னேன். இன்றைக்கு உள்ள சூழ்நிலையை பொறுத்தவரையில் யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பது தான் எங்களின் கொள்கை. அதைத்தான் இன்றைக்கு பேசிக்கொண்டு வருகிறோம்.

கேள்வி:- அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தி.மு.க. எப்படி எதிர்கொள்கிறது?

பதில்:- இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் போகப்போக பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம். எல்லாவற்றையும் சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

கேள்வி:- தமிழகத்தில் நடைபெறும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் நியாயமாகத்தான் இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அமலாக்கத்துறையில் இருக்கிறவர்கள், அவர்களின் கூட்டணியில் இருக்கிறவர்கள் மீதுள்ள வழக்குகளை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அதுதான் அந்த நியாயம், அவர்களை பொறுத்தவரையில்.

கேள்வி:- தி.மு.க. ஒரு ஊழல் கட்சி. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்றும் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்:- இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பக்கத்தில் யாரை (எடப்பாடி பழனிசாமி) அமரவைத்திருக்கிறார்கள்? என்று பார்த்தீர்களா.. அவரால் குற்றம்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்களெல்லாம் இன்றைக்கு அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளார்கள். அவர் அரவணைத்து கொண்டிருக்கிறார். அவரே (பிரதமர்), இப்படி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. மேற்கண்டவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.