அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல அவரது மகன் டாக்டர் கவுதம சிகாமணி எம்.பி.யும் விசாரணைக்கு ஆஜரானார்.

செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள அவரது வீடு உள்பட 7 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் முடிந்தது. அப்போது அவரிடம் நீங்கள் மீண்டும் விசாரணைக்கு 18-ந்தேதி (நேற்று) மாலை 4 மணி அளவில் ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கினர். மேலும் இந்த வழக்கு மற்றும் அன்னிய செலாவணி முறைகேடு விவகாரத்தில் ஆஜராவதற்கு அவருடைய மகன் டாக்டர் கவுதம சிகாமணி எம்.பி.க்கும் சம்மன் அளிக்கப்பட்டது. விசாரணை முடிந்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீடு திரும்பிய நிலையில், சிறிது நேரம் அவர் ஓய்வு எடுத்தார்.

பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை நடத்தியது மனிதாபிமானமற்ற செயல் என்று அவரது வக்கீல் சரவணன் கண்டனம் தெரிவித்து இருந்தார். அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பொன்முடியை நேற்று காலையில் இருந்தே அமைச்சர்கள், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள், பொன்முடியின் ஆதரவாளர்கள் சந்தித்த வண்ணம் இருந்தனர். இதனால் பொன்முடியின் இல்லம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு 2-வது நாளாக ஆஜராக பொன்முடி, அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோர் ஒரே காரில் சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்து பிற்பகல் 3.24 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு புறப்பட்டுச் சென்றனர். சரியாக 3.50 மணி அளவில் அவர்கள் சாஸ்திரி பவன் சென்றடைந்தனர். முன்பக்க நுழைவுவாயில் முன்பு ஏராளமான நிருபர்களும், புகைப்பட கலைஞர்களும் திரண்டிருந்தனர். இதையடுத்து பொன்முடியும், அவரது மகன் கவுதம சிகாமணியும் பின்பக்க நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றனர். அவர்களுடன் அவரது குடும்ப வக்கீலான விழுப்புரத்தை சேர்ந்த எட்வர்ட் ராஜா என்பவரும் உள்ளே சென்றார். பின்னர் சரியாக 4 மணி அளவில் அவர்களிடம் விசாரணை தொடங்கியது. அந்த நேரத்தில் வக்கீல் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

மாலை 4 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 10.05 மணிக்கு நிறைவடைந்தது. இரவு 10 மணிக்கு பிறகு அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். 6 மணி நேர தொடர் விசாரணையில் அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து உடனடியாக அவர் தனது காரில் அங்கிருந்து சைதாப்பேட்டை இல்லம் நோக்கி புறப்பட்டார். அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தி.மு.க.வினரும் கலைந்து சென்றனர்.

விசாரணை முடிந்து அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தேசரி வெளியே வந்தார். அவர் நிருபரிடம் கூறும்போது, ‘அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை முடிந்துவிட்டது. கைது நடவடிக்கை இல்லை. மறு விசாரணைக்கான சம்மனும் வழங்கவில்லை. தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்’ என்று கூறி சென்றார்.