விந்தியா பற்றி அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பற்றி அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா பற்றி, திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறு பரப்பும் வகையில் யூடியூபில் பேசியதாக அதிமுக சட்ட ஆலோசகர் இன்பதுரை, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, குடியாத்தம் குமரன் பேசியிருந்த வீடியோவும் அந்த புகாரில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்த தேசிய மகளிர் ஆணையம், உரிய நடவடிக்கை எடுக்க சென்னை போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் திமுக பேச்சாளரான குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐபிசி பிரிவு 294(பி), 506, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, குடியாத்தம் குமரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், பேச்சாளருமான குடியாத்தம் குமரன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட அதிமுகவினர் புகார் மனுக்களை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.