செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைதொடர்ந்து அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
ஜூன் 14ஆம் தேதி அதிகாலையில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு கடந்த ஜூன் 21ஆம் தேதியன்று பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் எனக்கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு செந்தில் பாலாஜி தரப்புக்கு சாதகமாவும், அமலாக்கத்துறைக்கு சாதகமாகவும் இரண்டு வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால் வழக்கு ஒரு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் அமலாக்கத்துறையின் கைது சரியானதுதான் என்ற நீதிபதி பரதசக்ரவர்த்தியின் தீர்ப்பை கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று உறுதி செய்தார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி சார்பில் ஏற்கெனவே தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது அவரது மனைவியின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதித்து மேல்முறையீடு செய்துள்ளார். அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரமில்லை, அவ்வாறு கைது செய்யப்படும்போதும் சட்டநடவடிக்கைகளை அவர்கள் பின்பற்றவில்லை, தனது கணவர் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை மனுவில் கூறி உள்ளார்.