பொது சிவில் சட்டம்: சட்ட ஆணையம் கருத்து கேட்டது தொடர்பாக மத்திய அரசு விளக்கம்!

பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் எதற்காக கருத்து கேட்டது என ராஜ்யசபாவில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகளிடம் சட்ட ஆணையம் ஒரு மாத காலம் கருத்து கேட்டது. இப்பொது சிவில் சட்டம் தொடர்பாக சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையத்திடம் கருத்து தெரிவித்த திமுக, இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடிப்படையில் அவரவர் பழக்க வழக்கங்களை அவரவர் பின்பற்றுவதை திமுக ஆதரித்து வந்துள்ளது. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும். சட்டம் – ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகள் உருவாகும். எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசு உரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்பு சட்டம் வழங்கிய தனிநபர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சி என்பதால், பொது சிவில் சட்டத்தை திமுக வலிமையாக எதிர்க்கிறது. இதை அமல்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையது அல்ல. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையை பாதிக்கும் எந்த சட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற கூடாது. இந்த பொது சிவில் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசமைப்பின் சட்டப் பிரிவுகளை மீறுவதாக திமுக பார்க்கிறது என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பொது சிவில் சட்டம் தொடர்பாக கேள்விகளை எழுப்பி இருந்தார். அதாவது பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணையம் அண்மையில் புதிய ஆலோசனை செயல்முறையைத் தொடங்கியுள்ளதா? பொது மற்றும் மத அமைப்புகளிடமிருந்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் (UCC) பற்றிய கருத்துக்களைக் கேட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களின் கருத்துக்கு எதிராக இருக்கும்போது, சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வதற்கான காரணம் என்ன? அனைத்து அரசியல் கட்சிகளிடையே பரந்த ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது என்று சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கம் உறுதியளிக்குமா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? ஆகிய கேள்விகளை வைகோ கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிக்கையில், இந்தியாவின் 21ஆவது சட்ட ஆணையம் 31.08.2018 அன்று “குடும்பச் சட்டத்தின் சீர்திருத்தம்” குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. ஆனால் அது எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. மேற்கூறிய வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால், பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், அதன் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, 22ஆவது சட்ட ஆணைம், 14.06.2023 அன்று மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் பெற முடிவு செய்தது என விளக்கம் அளித்தார்.