மணிப்பூர் சம்பவம் கவலை அளிக்கக்கூடியது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியில் லாஸ்பேட்டை விமானநிலையச் சாலையில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி பூங்காவை துணை நிலை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்தார். அதையடுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் 70 பூங்காக்கள் இட வசதியோடு உள்ளது. மிஷன் பார்க் என்ற பெயரில் அனைத்து பூங்காக்களும் சரி செய்யப்படவுள்ளது. குழந்தைகள் விளையாடவும், பெரியோர்கள் நடை பயிற்சி செய்யவும் இப்பூங்காக்கள் பயன்படும். முதல் முயற்சியாக இப்பூங்கா திறக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல் கட்டமாக 25 பூங்காக்கள் சரி செய்யப்படும்.
அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வியில் பத்து சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த முழு முயற்சி நிர்வாகத்தில் எடுத்து வருகிறார்கள். நிர்வாக ரீதியாக சில சிக்கல்கள் இருக்கிறது. அதை சரிசெய்வோம். அமைச்சரவை ஏற்கெனவே முடிவு செய்து மத்திய உள்துறைக்கு அனுப்பியிருந்தார்கள். இது சுமுகமாக நடைபெறும். சிக்கல்கள் ஏதும் இருக்காது என்று மத்திய உள்துறையில் தெரிவித்து தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறோம்.
புதுச்சேரி மக்களுக்கு நல்லது செய்யவே பணிகள் செய்கிறேன். அதில் சாயம் பூசவேண்டாம். உள்நோக்கம் இல்லை. தமிழ் பேசும் மாநிலத்துக்கு உதவுவதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லி உள்ளார்ந்த நிலையில் பணிபுரிகிறேன். அதில் உள்நோக்கம் கற்பிப்பது அவர்கள் நோக்கம். டயாலிஸ் சிஸ்டம் குஜராத்தை போல் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டும்.
மணிப்பூர் சம்பவம் கவலை அளிக்கக் கூடியது. பெண்கள் பாதிக்கப்பட்டால், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் மரண தண்டனை கொடுக்க வேண்டும். பேச முடியாத அளவுக்கு வருத்தம் தருகிறது. பெண்கள் தாங்கமுடியாத மிகப் பிரச்சினை சந்தித்துள்ளார்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற அனைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிக நாட்கள் ஆனது தொடர்பாக நீங்கள் கேட்பதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அது அரசியலாகும்.
உயர் கல்வியில் புதுச்சேரியில் தரம் சரிவு களையப்படும். ஆராயப்படும். ஸ்மார்ட் சிட்டி பணி ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளதை கேட்கிறீர்கள். இப்பணிகள் நேர்மையாக நடக்கிறது. ஆதாரமில்லா குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாது. இக்கேள்வியே என்னிடம் கேட்கக்கூடாது. எதிர்க்கட்சி எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும். 20 ஆண்டுகளாக அரசியல் கட்சியில் இருக்கிறேன். இது சிரிப்புதான் வருகிறது. வெளிப்படையாக நேர்மையாகதான் நிர்வாகம் உள்ளது. இவ்வாறு தமிழிசை கூறினார்.