மணிப்பூர் வன்முறை: சென்னையில் மின்சார ரயில்கள் மறிப்பு!

மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து, சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரத்தை பார்த்து பலரும் கொதித்து போய் இருக்கிறார்கள். நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரித்தும் மாறி மாறி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஒரு கட்டத்தில் கலவரம் வெடித்தது. . கடந்த மே மாதம் 4 ம் தேதி குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற பாலியல் கொடுமை செய்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது . இந்த வீடியோ பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலுக்கு எதிர்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் பாஜகவினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சி நிற அமைப்புகள் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தனது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து தண்டவாளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலை மறித்து மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் கலவரத்த்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் உடனடியாக கலவரத்தை நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீனம்பாக்கம் காவல் துறையினர் விரைந்து சென்று தண்டவளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்தினர். இதையடுத்து சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு மின்சார ரயில் வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில் இயக்கப்பட்டது இதனால் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.