கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவால் பலர் இறக்கக்கூடும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷ்யாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷ்யா சம்மதித்தது. இதன்படி அந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாது.
இந்த ஒப்பந்தம் கடந்த திங்கள்கிழமை காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷ்யா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சொந்த உணவு மற்றும் உர ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும், போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளைச் சென்றடையவில்லை என்றும் ரஷ்யா புகார் கூறியது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய சில நாட்களில் ஏற்பட்டுள்ள தானியங்களின் விலை உயர்வு, மில்லியன் கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “தற்போது 69 நாடுகளில் சுமார் 362 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. இந்த தானிய விலை உயர்வு வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களால் மிகவும் கடுமையாக உணரப்படும். சிலர் பசியுடன் இருப்பார்கள். சிலர் பட்டினியால் வாடுவார்கள். பலர் இதன் காரணமாக இறக்கலாம்” என்று கூறினார்.
ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை கருங்கடலில் கப்பல்களைக் கைப்பற்றும் பயிற்சியை மேற்கொண்டது. உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்குச் செல்லும் எந்தவொரு கப்பல்களையும் இராணுவ பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களாகக் கருதுவதாக ரஷ்யா கூறியுள்ளது.