திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது: சசிகலா

ஈரோடு மாவட்டத்தில் ஆதரவாளர்களிடம் பேசிய சசிகலா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்தார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக தாமே நீடிப்பதாக சசிகலா தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அவ்வப்போது அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் திடீரென 2 நாட்கள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார் சசிகலா. ஈரோடு மாவட்டம் கவுந்தபாடிக்கு நேற்று இரவு வருகை தந்த சசிகலாவுக்கு முன்னாள் ராணுவ வீரர் செங்கோட்டையன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். அப்போது சசிகலா பேசியதாவது:-

மேற்கு மாவட்ட மக்கள், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் அதிமுகவுக்கு ஆதரவு தந்தனர். இப்போதும் ஆதரவாகவே இருக்கின்றனர். இதனால்தான் இந்த மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என ஒருவரிடம் முதல்வர் பதவியை கொடுத்தோம். ஆனால் அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் அனைவருமே அறிவீர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு நிறுத்தி விட்டது. அம்மா உணவகங்கள், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை திமுக அரசு கைவிட்டுவிட்டது. திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அத்தேர்தலில் ஆளும் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து அந்தியூர் பவானி பிரிவில் ஆதரவாளர்களிடம் பேசுகையில், மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோவை, ஈரோட்டில் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு காய்கறி விலைகள் உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை பெற்றுத் தருவதில் திமுக அரசு தாமதம் செய்யவே கூடாது என்றார். பின்னர் திருப்பூர் சென்ற சசிகலா அங்கு தங்கி ஓய்வெடுத்தார். இன்று 2-வது நாளாக திருப்பூரில் மாலை 4 மணி முதல் ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார்.