ஜமைக்காவில் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
ஜமைக்கா நாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் ஜமைக்கா கவர்னர் ஜெனரல் பேட்ரிக்குடன் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், அந்நாட்டில் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ள சாலையை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அம்பேத்கரின் பெயர் கடல் கடந்து பரவி இருப்பதை பார்த்து பெருமை கொள்கிறேன். அம்பேத்கர், மார்கஸ் கார்வே போன்றவர்களை ஒரு தேசத்துக்குரியவர்களாகவோ அல்லது சமூகத்துக்க உரியவர்களாகவோ வரையறுக்க முடியாது. அனைவருக்கும் சம உரிமை என்று அவர்கள் கொடுத்த குரலும், அனைத்து பாகுபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வர அவர்கள் எடுத்த முயற்சியும் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறினார்.