45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவி இறக்கம்: தமிழக அரசு!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற வட்டாட்சியர்களுக்கான பதவி உயர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பதவி உயர்வு பட்டியலில் தகுதி இருந்தும் தங்கள் பெயர் சேர்க்கப்படவில்லை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி 2014 – 2019 ஆம் ஆண்டு வரை பதவி உயர்வு பெற்ற 45 துணை ஆட்சியர்கள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் துணை ஆட்சியர்களாக இருந்த 45 அதிகாரிகள் வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 110 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருவாய் மற்றும் பேரிடர் மோலாண்மை துறையில் 110 வட்டாசியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2014 – 2019 ஆம் வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலில் திருத்தங்கள் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் ஆணையரகம் அறிவித்துள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.