டாஸ்மாக்கில் விரைவில் ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் வசதி: அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக் கடைகளில் விரைவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மதுக்கடைகளில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-

டாஸ்மாக் மதுபான கடைகளில் மாற்றங்களை கொண்டு வர 2 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். 18 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் வசதியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இந்த வசதியை அமல்படுத்த தொழில் நுட்ப கருவிகள் வாங்க வேண்டியிருக்கிறது. இதனால், கால அவகாசம் தேவைப்படுகிறது” என்றார்.

டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 வாங்கப்படுவதாக பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்து உள்ள சூழலிலும், இன்னும் கூட சில இடங்களில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவது நீடிப்பதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழாமல் இல்லை. எனவே, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்களுக்கு பெருமளவு தீர்வு காணப்படும் என தெரிகிறது.