தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடக்க வேண்டிய ஒன்றுதான்: டாக்டர் கிருஷ்ணசாமி!

கர்நாடகா நமக்கு வழங்க வேண்டிய ஜுன் மாதம் 2 டிஎம்சி தண்ணீரை வழங்கவில்லை.. உபரிநீராக 30 டிஎம்சி தண்ணீரையும் வழங்கவில்லை. இதுகுறித்து முதல்வரும் எதுவும் சொல்லவில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவுநாளில் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினார். திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் நினைவஞ்சலி செலுத்திவிட்டு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் நினைவகம் அமைக்க அரசு நிலம் ஒதுக்க வேண்டும். புதிய தமிழகம் சார்பில் நினைவகம் எழுப்பப்படும். தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டரை ஏக்கர் தேயிலை தோட்டங்களை பிரித்து கொடுக்க வேண்டும். அவர்களின் மேம்பாட்டுக்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் த்தில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாஞ்சோலை எஸ்டேட்டில் வழங்கப்பட்ட 8,400 ஏக்கர் நிலத்திற்கான 99 ஆண்டு குத்தகை ஓரிரு வருடங்களில் முடியும் நிலையில் உள்ளது. அதை மீட்டு அங்குள்ள தொழிலாளர்களுக்கு விவசாயம் செய்ய தலா, 2.5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டுமானால், இதற்காகவே ஒரு ஸ்பெஷல் கமிட்டியும், சிறப்பு நீதிமன்ற ஆணையமும் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 19 மதுபான ஆலைகளில், 17 மதுபான ஆலைகள் திமுகவினருக்கு சொந்தமானவை. மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தால் 22 பேர் உயிரிழந்து போனார்கள். ஆனாலும், இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலை 7:00 மணிக்கு மது குடிப்பவர்கள் குடிகாரர்கள் இல்லை என்கிறார் அமைச்சர் முத்துசாமி. ஒரு பொறுப்பு வாய்ந்தவர், இப்படியெல்லாம் ஜோக் அடிக்கக்கூடாது. மதுவை எப்போது சாப்பிட்டால் என்ன? எப்போது சாப்பிட்டாலும் அது கேடுகளையே தரும். மது ஒரு விஷம்.. அது காலையில் சாப்பிட்டாலும், மதியம் சாப்பிட்டாலும், மாலையில் சாப்பிட்டாலும் கேடு கேடுதான்.

தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடக்க வேண்டிய ஒன்றுதான். அப்போதுதான் அன்னிய உதவியுடன் நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்திற்கு கர்நாடகா, ஜூன் மாதம் தரவேண்டிய, 2 டிஎம்சி ஜூலை மாதத்திற்கான, 30 டிஎம்சி தண்ணீரை இன்னமும் வழங்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு எதிராக மட்டும் திமுகவினர் பேசி வருகிறார்கள். பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் கூட்டம் கூட்டுகின்றனர். புலிகளைக் கண்டு பூனைகள் பயப்படலாம்.. ஆனால், பூனைகளைக் கண்டு புலிகள் பயப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.