‘கருப்பு உடை’ போராட்டம்: நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி!

மக்களவையில் எதிர்க்கட்சியினர், ”பிரதமரே அவைக்கு வாருங்கள். மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்” என்று உரக்க கோஷம் எழுப்பினர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தால் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் பல ஒத்திவைப்புகளைக் கண்டுவரும் சூழலில் இன்று (ஜூலை 27) அவை கூடியதும் பிரதமர் அவைக்கு வரவேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். எதிர்க்கட்சியினர், ”பிரதமரே அவைக்கு வாருங்கள். மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்” என்று உரக்க கோஷம் எழுப்பினர்.

மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பெருமைகளை அடுக்கி உரைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சியினர் பிரதமர் அவைக்குவர வலியுறுத்தியும், மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வலியுறுத்தியும் பேசினர். அப்போது என்டிஏ கூட்டணியினர் ‘மோடி, மோடி..’ என்று குரல் எழுப்ப, ‘இண்டியா’ கூட்டணியினர் ‘இண்டியா, இண்டியா’ என்று குரல் ஒழுப்பினர். இரு தரப்பினரும் முழக்கங்கள் எழுப்ப அவை அதிர்ந்தது. தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து மாநிலங்களவை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.

அவைக்கு இன்று இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பலரும் கருப்புச் சட்டை அணிந்தும் அப்படியில்லாதோர் கையில் கருப்புத் துணி கட்டியும் வந்திருந்தனர். ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சட்டா இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அளித்தப் பேட்டியில், “மணிப்பூர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராகவும், அங்கே நிகழும் காட்டுமிராண்டித்தனங்களைக் கண்டித்தும் இன்றைய தினம் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளோம். இது ஓர் அடையாளப் போராட்டம். மணிப்பூர் மக்களின் துயரில் நாங்கள் துணை நிற்கிறோம் என்பதை நிறுவுகிறோம். மணிப்பூரும் இந்தியாவின் பகுதி என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மணிப்பூர் பற்றி எரியும் இவ்வேளையில் அரசு தனது அரசியல் சாசனக் கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மணிப்பூரில் ஆளும் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச வாய்ப்பில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் பிரதமர் பேச வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆனால் பிரதமர் ஏன் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. அதனாலேயே நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நிர்பந்திக்கப்பட்டோம். அந்தத் தீர்மானத்தால் ஆட்சிக்கு பாதிப்பில்லை என்பது எங்களுக்கே தெரியும். ஆனாலும் வேறு வழியில்லையே! நாட்டின் பிரதமர் நாட்டு மக்கள் முன்னர் வந்து மணிப்பூர் பற்றி பேச வேண்டும்” என்றார்.

சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ் அளித்தப் பேட்டியில், “இன்று நாங்கள் அமளியில் ஈடுபடப்போவதில்லை. மாறாக கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளோம். அல்லது எம்.பி.க்கள் கருப்புத் துணியை கையில் கட்டி வருவார்கள். நாங்கள் மணிப்பூர் விவகாரத்தில் அக்கறை காட்ட இன்னொரு காரணம் அது மியன்மார் எல்லையை ஒட்டி இருப்பதும்கூட. மியன்மாரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கே தீவிரவாதிகள் அட்டகாசமும் இருக்கிறது. இந்தச் சூழலில் மணிப்பூர் அமைதி முக்கியம்” என்றார்.