செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா நீடிக்கலாம்: உச்சநீதிமன்றம்!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் எஸ்.கே.மிஸ்ரா நீடிக்கலாம் என்றும், அதற்கு பிறகு பதவிநீட்டிப்பு கோரி யாரெனும் வழக்கு தொடர்ந்தாலும் விசாரணைக்கு கூட ஏற்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அமலாக்கத்துறை இயக்குநராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. அதற்கு பிறகு அவருக்கு நிச்சயமாக பணிநீட்டிப்பு கூடாது என்றும் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை இயக்குநர் பொறுப்பை நீட்டித்தது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் எஸ்.கே.மிஸ்ராவின் பதவி நீட்டிப்பை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசு புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், எதற்காக இந்த ஒரு நபருக்காக மீண்டும் மீண்டும் மத்திய அரசு வருகிறீர்கள். இந்த ஒரு அதிகாரியை தவிர வேறு அதிகாரிகளே இல்லையா? மற்ற அதிகாரிகள் யாரும் அமலாக்கத்துறையில் திறமையானவர்கள் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சர்வதேச சட்டவிரோத பணப்பறிமாற்றத்தை தடுக்கும் சர்வதேச கூட்டம் இந்தியாவில் நடக்கிறது. அதன் காரணமாகதான் இந்த பதவி நீட்டிப்பு கேட்கிறோம் என விளக்கம் அளித்தார்கள். பயங்கரவாதிகளுக்கு பணம் சென்று சேறும் பணப்பறிமாற்றம் குறித்து இதில் பேசப்பட உள்ளதன் காரணமாக தேச நலனை கவனத்தில் கொண்டு பதவியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் எஸ்.கே.மிஸ்ரா நீடிக்கலாம் என்றும் அதற்கு பிறகு பதவிநீட்டிப்பு கோரி யாரெனும் வழக்கு தொடர்ந்தாலும் விசாரணைக்கு கூட ஏற்க மாட்டோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.