அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. ஜூலை 5ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட உள்ளது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அதிமுகவுக்கு தென் மண்டலத்தில் செல்வாக்கு இல்லை என்ற பேச்சு பரவலாக உள்ளது. சசிகலா, டிடிவி தினகரன் இல்லாத சமயத்திலேயே தென் மாவட்டங்களில் பல தொகுதிகளை அதிமுக திமுகவிடம் பறிகொடுத்தது. ஓபிஎஸ்ஸும் தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு டிடிவி தினகரன் உடன் கரம் கோர்த்துள்ளார். அப்படியிருக்க தென் மண்டலத்தில் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தென் தமிழ்நாட்டிலும் அதிமுகவின் கொடி உயரப் பறக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி நிறுவுவதற்காக மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு பணிகள் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அண்ணாமலையின் பாதயாத்திரை இன்று தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உடல்நிலையை காரணம் காட்டி கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.