ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருவதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டே காலி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளதாக மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை ராட்சத எந்திரங்களைக் கொண்டு என்எல்சி நிறுவனம் தோண்டி எடுத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து நேற்று நெய்வேலியில் என்.எல்.சி வளாகம் முன்பாக பாமக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தடியடி சம்பவங்கள் நடைபெற்றன. பாமகவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டார்கள். இதனால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த நிலையில், நேற்று மக்களவையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் பேசியதாவது:-
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இயங்கி வரும் என்.எல்.சி எனப்படும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் ஆண்டுக்கு ஆயிரம் கோடி இலாபத்தில் இயங்கி வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், குடியிருப்பை கொடுத்தவர்கள் இழப்பீடு கேட்டும், நிரந்தர வேலை கேட்டும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் சுரங்க பணிகளை மேலும் விரிவாக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் முயன்று வருகிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குடிபெயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இதனை காட்டுமன்னார்கோயில் வரை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தயாராக இல்லை.
ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும். வீட்டிற்கு 1 கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவணச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும் சி.எஸ்.ஆர் எனப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை அந்த பகுதியை சார்ந்த வளர்ச்சி திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டும், ஆனால் இந்த சி.எஸ்.ஆர் நிதியை வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மேலும் வட மாநிலங்களை சார்ந்தவர்கள் பெரும்பாலும் அங்கு பணியில் அமர்த்தபடுகிறார்கள். அதனையும் நிறுத்த வேண்டும். அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சி.எஸ்.ஆர் நிதி அந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.