மின் கம்பம் சாய்ந்து கணுக்காலை இழந்த இளைஞருக்கு ஆறுதல் கூறிய தங்கம் தென்னரசு!

மதுரையில் மின் கம்பம் சாய்ந்து கணுக்காலை இழந்த இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம். இவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (19). இவர் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். ஜூடோ விளையாட்டு வீரரான இவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்து இருந்தார். ஓரிரு வாரத்தில் தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்கும் வகையில் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதே கோச்சடை பகுதியிலுள்ள தனது நண்பர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, கோச்சடை முத்தையா கோயில் அருகே பழுதான மின் கம்பம் ஒன்றை கிரேன் மூலம் மாற்றியமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். கம்பத்தில் மின் கம்பிகளை பொருத்தும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் மின் கம்பம் கிரேனிலிருந்து சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் நடந்து கொண்டிருந்த பரிதி விக்னேஷ்வரன் மீது விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கினார். காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரிதி விக்னேஸ்வரனின் கணுக்கால் அகற்றப்பட்டது.

இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக ரூ.3 லட்சம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.