நிதி நெருக்கடியால் உலகளவில் உணவு உதவிகளை பெருமளவில் குறைத்தது ஐநா!

நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் உணவுகளை பெருமளவில் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐநாவின் உலக உணவு திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

உலக உணவு திட்டம் செயல்படுத்தப்படும் ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் மற்றும் மேற்கு ஆப்ரிக்கா உள்ளிட்ட 86 நாடுகளில் 38 நாடுகளில் ஏற்கனவே உதவிகள் குறைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் விரைவில் உதவிகளை குறைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. உலக உணவு திட்டத்தின் கீழ் தேவைப்படும் அனைவருக்கும் உதவ ஆண்டுக்கு சுமார் ரூ.1.60 லட்சம் கோடி தேவை. ஆனால் தற்போது ரூ.82 ஆயிரம் கோடி முதல் ரூ.1.15 லட்சம் கோடி மட்டுமே நிதி இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இதை கூட எட்ட முடியாமல் இந்த ஆண்டு சுமார் ரூ.41 ஆயிரம் கோடி மட்டுமே உலக உணவு திட்டத்திற்கான நன்கொடை நிதி கிடைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று, உக்ரைன் போர் மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்கள், மனிதாபிமான தேவைகளின் உச்சத்தை எட்டச் செய்துள்ளது. ஆனால் நிதி மிக மிக குறைந்துள்ளது. எனவே அடுத்த ஆண்டும் நிலைமை மோசமாகவே இருக்கும். இது வரலாற்றில் மிகப்பெரிய உணவு மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடியை நீட்டிக்க செய்துள்ளது. இந்த நெருக்கடியான நிலையில் உலக நன்கொடையாளர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அவற்றின் பட்ஜெட்டில் மனிதாபிமான உதவிகளுக்கான நிதியை குறைத்துள்ளன. போதிய நிதி இல்லாததால் ஆப்கானிஸ்தானில் வழங்கப்படும் உதவிகள் 66 சதவீத மக்களுக்கு குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளுக்கு முன்னுரிமை தர வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.