தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்: ஜெயக்குமார்

ராக்கெட் போல ஏறி வரும் தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் யோசனையை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

இன்னைக்கு தமிழ்நாட்டுல தக்காளி விலை எங்கேயோ போயிட்டு இருக்கு. கோயம்பேடு மொத்த விலை மார்க்கெட்டிலேயே தக்காளி ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆயிட்டிருக்கு. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.170, ரூ.190 என விலை ஏறிட்டே இருக்கு. அதேபோல, இஞ்சி, சின்ன வெங்காயம் விலையை கேட்டால் பக்கத்துலேயே போக முடியாத அளவுக்கு இருக்கு. இவ்வளவு விலை கொடுத்து சாமானிய மக்களால் எப்படி வாங்கி சாப்பிட முடியும்? ஆனால் இது பற்றி விடியாத திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்குது.

அதை விட கொடுமையான விஷயம், தக்காளி விலை பற்றி சென்னை மேயர்ட்ட ஒரு நிருபர் கேக்குறாரு. அதுக்கு அவங்க ஒரு பதில் கூட சொல்லல. ஆனா, உதயநிதி நடிச்ச மாமன்னன் படம் பற்றி கேட்டால் பக்கம் பக்கமா மத்தளம் வாசிக்கிறாங்க. சமையலுக்கு அடிப்படையான தக்காளி விலையை குறிக்க முதல்வரும் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குறாரு. அமைச்சர்களும் ஒன்னும் செய்ய மாட்றாங்க. சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கல.

ஒரு பொறுப்பான அரசாங்கமா இருந்தா என்ன செய்யணும். பக்கத்து மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து, மானிய விலையில் 25 ரூபாய், 30 ரூபாய்க்கு தமிழ்நாட்டுல விற்க ஏற்பாடு செய்யணும். அப்படி செஞ்சா மக்களும் நிம்மதியா இருப்பாங்க. அப்படியே கொஞ்ச நாளில் தக்காளி விலையும் குறைஞ்சிடும். அப்படி தக்காளி கொள்முதல் செய்ய ஆயிரம் கோடி நிதி ஒதுக்குங்க. என்ன குறைஞ்சிட போகுது. அரசு விளம்பரத்துக்கும், உங்க மூஞ்ச போஸ்டர் ஒட்டுறதுக்கும் எவ்வளவு ஆயிரம் கோடி செலவு பண்றீங்க.. உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக இதை பண்ணுங்களேன். இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.