பாகிஸ்தானில் அரசியல் மாநாட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 44 பேர் பலி!

பாகிஸ்தானில் ஒரு அரசியல் கட்சியின் மாநில மாநாட்டு கூட்டத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 44 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக தீவிரவாதிகளின் வெறியாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. தாங்களும் முயன்றால் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணததில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 7 மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பெரிய குண்டுவெடிப்புகள் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளன. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் பாகிஸ்தானை அதிரச் செய்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பஜோர் மாவட்டத்தில் ஜாமியத் உலேமா இஸ்லாம் ஃபாஸ் (JUI-F) என்ற அரசியல் கட்சி சார்பில் மாபெரும் மாநில மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முக்கியமான கட்சி என்பதால் இந்த மாநாட்டில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி மாலை 6.00 மணியளவில் அந்தக் கூட்டத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் அங்கிருந்தவர்கள் உடல் வேறாக தலை வேறாக சிதறி தூக்கி வீசப்பட்டனர். குண்டுவெடிப்பு சத்தத்தை கேட்டவர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் 44 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் ஜாமியத் உலேமா இஸ்லாம் கட்சியின் தலைவர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு தற்கொலை படை தாக்குதல் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை இந்த சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில் பாகிஸ்தான் தலிபான்கள் எனப்படும் தெஹ்ரிக் இ தலிபான்களின் ஆதிக்கம் என்பதால் அந்த அமைப்பு இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஜாமியத் உலேமா இஸ்லாம் ஃபாஸ் கட்சியின் தலைவர் மெளலானா ஃபஸ்லூர் ரகுமான் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவது தொடர்பாக, உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் கைபர் பக்துன்க்வா அரசாங்கத்திடம் இருந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை கோரியுள்ளது.