என்.எல்.சி. நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நெய்வேலியில் என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அந்த நிலத்தின் வழியாக கால்வாய் தோண்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், என்.எல்.சி. விரிவாக்க பணி தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளாக என்.எல்.சி. பயன்படுத்தவில்லை என்பதால், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. தொந்தரவு தரக்கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கால்வாய் தோண்டாவிட்டால் சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்துவிடும் என்றும், 1.5 கிமீ நீளத்துக்கு சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிலத்தை பயன்பாட்டிற்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நிலத்தை கையகப்படுத்தியபின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன்? அந்த நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும், என்.எல்.சி.க்காக அரசு கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரமாண பத்திரம், மனுதாரரின் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாதரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.