ரயில்வேயில் வேலை பெற்றுத்தர நிலத்தை லஞ்சமாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே பதவி வகித்தார். அப்போது வேலை வாய்ப்பு வழங்குவதற்கு நிலத்தை லஞ்சமாக வாங்கியதாக லாலு பிரசாத் யாதவ் மீதும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தது. அதன்பிறகு கடந்த 3 ஆம் தேதி ஜூலை 3-ம் தேதி, இந்த வழக்கில் சிபிஐ 2-வது குற்றப்பத்திரிகைய தாக்கல் செய்தது.
இந்த நிலையில் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் இவர்களின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது. டெல்லியின் நியூ பிரன்ட்ஸ் காலனியில் உள்ள குடியிருப்பு வீடு மற்றும் பாட்னாவில் உள்ள சொத்துக்கள் என பல்வேறு இடங்களில் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் நடவடிகைக்காக மத்திய அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இதனால், எதிர்க்கட்சிகளை குறிவைத்த்து பாஜக விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாக குற்றம் சாட்டும் நிலையில் அமலாக்கத்துறை லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியிருப்பது அரசியல் ரீதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.