அரசு செய்யும் கொள்முதலில் எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோருக்கு அநீதி இழைக்கப்படுவதாக மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
நான் நாடாளுமன்றத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் கொள்முதலில் எஸ்.சி, எஸ்.டி, சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து எவ்வளவு கொள்முதல் செய்யப்படுகிறது என்பதைப் பற்றிய கேள்வியை (எண் 94/ 22.07 2023) எழுப்பி இருந்தேன். அதற்கு ஒன்றிய அரசின் மாண்புமிகு சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சர் பானு பிரதாப் சர்மா தந்துள்ள பதில் அதிர்ச்சியை அளிக்கிறது. 2018-19 இல் 166 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் – 1,53,485 கோடிகள். இதில் எஸ்சி, எஸ்டி, சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து எவ்வளவு கொள்முதல் ரூ 825 கோடிகள். மொத்த கொள்முதலில் 0.54 சதவீதம். 2019-20 இல் 152 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,31,461 கோடிகள். இதில் எஸ்சி, எஸ்.டி, சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து எவ்வளவு கொள்முதல் ரூ.691 கோடிகள். மொத்த கொள்முதலில் 0.53 சதவீதம். 2020-21 இல் 161 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.139420 கோடிகள், இதில் எஸ்.சி. எஸ். டி சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து எவ்வளவு கொள்முதல். ரூ.769 கோடிகள். மொத்த கொள்முதலில் 0.55 சதவீதம்.
2021-22 இல் 159 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,64,542 கோடிகள், இதில் எஸ்.சி. எஸ். டி சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து எவ்வளவு கொள்முதல் ரூ 1291 கோடிகள். மொத்த கொள்முதலில் 0.78 சதவீதம். 2022-23 இல் 150 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,75,099 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ்.டி, சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து எவ்வளவு கொள்முதல் ரூ 1468 கோடிகள். மொத்த கொள்முதலில் 0.84 சதவீதம். எல்லாம் அரை சதவீதம், முக்கால் சதவீதமாக உள்ளது. ஆனால் சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டு சட்டம் 2006 இன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 2012 சிறு குறு தொழில்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆணை என்ன சொல்கிறது? ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் செய்யும் சரக்கு/ சேவை கொள்முதலில் 4 சதவீதம் எஸ்.சி, எஸ். டி சிறு, குறு, தொழில் முனைவு நிறுவனங்கள் இடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 சதவீதம் எங்கே? இந்த அரை முக்கால் சதவீதம் எங்கே? 2012 ஆணையை மீறுபவர்களுக்கு தண்டனையாக ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது என்று அமைச்சரின் பதில் கூறுகிறது. இதுவரை எத்தனை நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன? மதிப்பெண் குறைவதால் என்ன விளைவு? அப்படி தண்டிக்கப்பட்டு இருப்பதாக வைத்துக் கொண்டாலும் சதவீதம் 4 க்கு பக்கத்திலேயே இல்லையே?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.