மகாராஷ்டிராவில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழர்!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாலத்தைக் கட்டிவந்த VSL லிமிடெட் கட்டுமான நிறுவனத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ் மேனேஜராக பணியாற்றி வந்தார். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனிடையே, எதிர்பாரா இந்த விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உடலை விமானம் மூலம் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் ஷாஹாபூரில் நேற்று இரவு கிரேன் சரிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்ருத்தி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நேரத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என ஷாஹாபூர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தானேவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக புனேவில் செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தப் பணிகளைச் செய்துவந்தது.
விபத்து தொடர்பாக முழுமையான விசாரணைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்” என்றார்.