சென்னை தாம்பரம் அருகே போலீஸாரால் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் இரு ரவுடிகள் உயிரிழந்துவிட்டனர்.
சென்னை கூடுவாஞ்சேரி காரணைபுதுச்சேரி சாலையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அப்போது அவர்கள் போலீஸார் மீது மோதுவது போல் வந்தனர். எனினும் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தின் போது போலீஸாரை அரிவாளால் வெட்டுவதற்கு அந்த காரில் இருந்த கும்பல் முயற்சித்தது. அதில் உதவி ஆயவாளர் சிவகுருநாதன் கையில் காயம் ஏற்பட்டது. அவர் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் ஆய்வாளரை வெட்ட முயன்ற போது அவர் தலையை குனிந்துவிட்டதால் அவரது தொப்பியில் வெட்டு பட்டது. இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக துப்பாக்கியை எடுத்த போது இரு ரவுடிகள் தப்பியோடிவிட்டனர். மற்ற இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்துவிட்டனர். அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இறந்த ரவுடிகள் இருவர் மீதும் சரித்திர பதிவு வழக்கு உள்ளது. இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள். இவர்கள் எதற்காக போலீஸாரை பார்த்ததும் தாக்க முயற்சித்தனர். ஏதேனும் சதி திட்டத்துடன் சுற்றித் திரிந்தனரா போன்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற இருவர் யார் என்பது குறித்த விவரங்களை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோட்டா வினோத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவருக்கு வலது கரமாக இருந்து வந்துள்ளார். பின்னர், அந்த ரவுடியிடம் இருந்து பிரிந்த சோட்டா வினோத் மண்ணிவாக்கம் ரமேஷ் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். வளர்ந்து வரும் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஆதனூர் உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், லாரி, ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள், பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது சோட்டா வினோத் கும்பல். இந்த கும்பலால் அப்பகுதியைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்சி வேறுபாடு இன்றி பல்வேறு அரசியல்வாதிகளுக்கும் இவர்கள் குடைச்சல் கொடுத்து வந்துள்ளனர். அதிமுக பெண் நிர்வாகி ஒருவரின் கணவரை பணம் கேட்டு மிரட்டியதாக சோட்டா வினோத் டீம் மீது புகார் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பிரமுகர் சக்கரபாணி என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டி, அவர் தராததால் கொடூரமாக வெட்டிய வழக்கில் சோட்டா வினோத் மற்றும் மண்ணிவாக்கம் ரமேஷை போலீசார் தேடிவந்தனர். இப்படி, பல்வேறு தொழில் செய்பவர்களிடம் மிரட்டி பல லட்சம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரௌடி சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மன்னிவாக்கம் ரமேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்வதில் இந்த டீம் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்துள்ளது. தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் மாமூல் கேட்டு தொடர்ந்து சோட்டா வினோத், மண்ணிவாக்கம் ரமேஷ் டீம் தொல்லை கொடுத்து, அரசியல்வாதிகளையும், ரியல் எஸ்டேட் பிரமுகர்களையும் மிரட்டி வந்துள்ள சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோர் இன்று என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது அப்பகுதி ரௌடிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.