கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆமை வேகத்தில் நடக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்

ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் வழக்கு ஆமை வேகத்தில் நடக்கிறதுஎன்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கோடநாடு கொலை வழக்கு விசாரணையை விரைந்து நடத்தக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், இன்று செவ்வாய்க்கிழமை தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு இல்லத்தில் நடந்து முடிந்திருக்கிற கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக விசாரணை செய்ய வேண்டும். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை ஆளும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், உரிய தண்டனையை கோடநாடு கொள்ளைக் கூட்டத்துக்கும், கொலையாளிகளுக்கும் பெற்றுத்தர வேண்டும். தேனியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

24.4.2017 அன்று கோடநாடு பங்களாவில், காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து, அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ண பகதூர் என்ற காவலாளியை படுகாயப்படுத்திவிட்டு, அதன் தொடர்ச்சியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜையும் கொலை செய்துவிட்டு, பின்னர், இந்த வழக்கில் குற்றவாளியாக கூறப்பட்ட சயான் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு, விபத்து ஏற்படுத்தி சயான் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்டனர்.

கோடநாடு பங்களாவில், கணினி ஆப்ரேட்டராக இருந்தவரையும் கொலை செய்யப்பட்டார். இத்தனையும் நடந்தபிறகு, அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் நம்முடைய எண்ணத்தை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின், தான் முதல்வராக வந்தால், 3 மாதங்களுக்குள் – 90 நாட்களுக்குள் கோடநாடு பங்களாவில் நடத்தப்பட்ட கொள்ளை, மற்றும் கொலையையும் கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவேன் என்று உறுதியளித்துதான் அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைக்கு 30 மாதங்களாகி விட்டன. இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் யார் என்பதை அறிய ஆவலுடன் உள்ளனர். எனவே இந்த வழக்கில் கொலை செய்தவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதனை உணர்த்தும் வகையில் தான் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இனியும் காலம் தாழ்த்தினால் அ.ம.மு.க. தொண்டர்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். எப்போதுமே மின்இணைப்பு துண்டிக்கப்படாமல் செயல்படும் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது மட்டுமின்றி, சிலமணிநேரம் மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பதவி ஆசை கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் அக்கறைகாட்டாமல் தனது பதவியை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவது தெரிந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் எங்களை கேலி செய்கின்றனர். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.