சீமானின் பேச்சு மிகவும் அருவருப்பானது, ஆபத்தானது: செல்வப்பெருந்தகை!

முஸ்லிம்களும், கிறித்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்றும், நாட்டில் நிலவும் அநீதி, அக்கிரமத்திற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சீமான் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது:-

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டிக்கும் போராட்டம் என்ற பெயரில் நேற்று (31.07.2023) பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்றும், நாட்டில் நிலவும் அநீதி, அக்கிரமத்திற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தது. அவரின் பேச்சு மிகவும் அருவருப்பானது. ஆபத்தானது.

மணிப்பூரில் ஒடுக்குமுறைக்கும், வன்முறைக்கும் ஆளான பழங்குடியின மக்களுக்கு எதிராக ஒன்றியத்திலும், மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்பொழுதெல்லாம் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை வீசுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதை மடைமாற்றம் செய்வது போல சீமானின் பேச்சுகள் உள்ளது. தேர்தலின் போது ‘வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுங்கள்’ என்று வன்முறையை தூண்டும் விதமாக பேசியுள்ளதையும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ‘வெறுப்பு முடிவுக்கு வருவது வெறுப்பால் அல்ல, அன்பால் மட்டுமே. இதுவே நிலையான விதி,’ என்று 2,500 ஆண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றார் புத்தர்.

மதவெறி சக்திகளும், வெறுப்பரசியல் கூட்டமும் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கின்ற சதிகளும் தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து முயற்சிக்கின்றார்கள். அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு பயணிக்கின்ற வலிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. வெறுப்பரசியல் பேசியதால் யாருமே வெற்றியடைவதில்லை. அதற்கு ஒரு உதாரணமாக தற்போது கர்நாடகா மாநிலம் உள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. மட்டுமல்ல; யார் வெறுப்பரசியல் செய்தாலும் இந்த மண்ணில் ஒருபோதும் எடுபடாது. இனி வருகின்ற காலங்களில் கட்சித் தலைவர்கள் தன்னுடைய பேச்சில் கண்ணியம் காக்க வேண்டும். யார் மனதையும் புண்படும்படி பேசுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.