அண்ணாமலை அரை கிலோ மீட்டர் நடந்துவிட்டு அதை நடைப்பயணம் என்கிறார்: கே.பாலகிருஷ்ணன்

அரை கிலோ மீட்டர் நடந்துவிட்டு அதை நடைப்பயணம் என்கிறார் அண்ணாமலை. இது நகைப்பிற்குரியதாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் கூட முழுமையாக இல்லை. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் பாஜக 9 எம்பி சீட்களை இந்த முறை எப்படியாவது பெற்றுவிடுவது என்று களத்தில் இறங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்க பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றை கட்சி நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ எனும் யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்களே பெரிய அளவில் பங்கேற்காமல் இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே பங்கேற்றிருந்தார். அன்று தேனியில் இருந்தும் ஓ.பி.எஸ் நடைப்பயணம் பக்கம் தலைகாட்டவில்லை. அதேபோல பாமக என்எல்சி விவகாரத்தில் பிஸியாகிவிட்டது. இப்படி கூட்டணி கட்சியினரே வராமல் இருந்து ஒருபுறம் எனில் மறுபுறம் எதிர்க்கட்சிகள் இந்த நடைப்பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.

கோவை காந்திரபுரம் பகுதியில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

மணிப்பூரில் கலவரம் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. குக்கி, மெய்டெய் சமூகத்தினருக்கு இடையேயான மோதல் என்று இதை கூறுகிறார்கள். ஆனால் அங்குள்ள மலைகளில் உள்ள பழங்குடியின மக்களை துரத்தியடித்துவிட்டு அம்பானி, அதானிக்கு அந்த வளங்களை தாரை வார்க்கவே இதுபோன்ற கலவரங்களை ஆளும் பாஜக மாநில அரசு தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. அதேபோல மணிப்பூர் முதலமைச்சரை டிஸ்மிஸ் செய்ய பாஜக அரசு தயாராக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு மணிப்பூருக்கு ரூ.10 கோடி அளவிலான நிவாரண உதவிகளை அனுப்ப முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க தயாராக இல்லை. அவர் நாடாளுமன்றத்திற்கே வரமாட்டார். ஆனாலும் பிரதமர் அவர். என்ன பிரதமர் இவர்? இங்கு அண்ணாமலையின் யாத்திரையை தொடக்கி வைக்க அமித்ஷா வருகிறார். ஆனால் உள்நாட்டில் நடக்கும் கலவரங்களுக்கு தீர்வு காணமாட்டார். என்னை கேட்டால், ஒரு கட்சியின் நடைப்பயணத்தை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த நடைப்பயணம் நகைப்பிற்குரியதாக இருக்கிறது. நடைப்பயணம் எனில் நடந்தே செல்ல வேண்டும். ஆனால் அண்ணாமலை ஒரு அரை கி.மீ தூரம் நடக்கிறார். பின்னர் சொகுசு வேனில் 15-20 கி.மீ செல்கிறார். அங்கு மீண்டும் ஒரு அரை கி.மீ நடக்கிறார். பின்னர் மீண்டும் சொகுசு வாகனம். இது என்ன வகையான நடைப்பயணம்? அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எழுதுவதற்கு தவிர வேறு எதற்கும் இது பயன்படாது.

கோடநாடு விவகாரத்தில் உண்மையை கொண்டுவர வேண்டியது தமிழக காவல்துறையினரின் கடமை. இதை அவர்கள் தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருந்தார்கள். இந்த வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நல்ல கோரிக்கைதான். அதேபோல சீமான் போன்ற ஆட்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. இருப்பினும் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் இழிவுப்படுத்தும அவருடைய பேச்சு கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.