ஜனாதிபதியுடனான சந்திப்பில், மணிப்பூரில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தவில்லை என்று கனிமொழி தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினர். இந்த குழுவில் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், ‘மணிப்பூரில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றோ, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றோ வலியுறுத்தவில்லை. யாரும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் என்பது எங்களது கோரிக்கை மட்டும் அல்ல, அங்கு போராடும் மக்கள் வலியுறுத்தும் கோரிக்கையாகவும் உள்ளது’ என்று தெரிவித்தார்.
திருச்சி சிவா கூறும்போது, “மணிப்பூரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களோடு பேசியதை அறிக்கையாக தயாரித்து ஜனாதிபதியிடம் கொடுத்து இருக்கிறோம். அதை பரிசீலிப்பதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஜனாதிபதியின் தலையீடு இதில் வேண்டும் என்றுதான் அவரை சந்தித்தோம்” என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘ஜனாதிபதியுடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது என்று சொல்ல முடியாது. அவர் எங்களுக்கு எந்த உறுதியையும் அளிக்கவில்லை. பரிசீலிக்கிறோம் என்ற ஒற்றைப்பதிலோடு அவரது விடை இருந்தது. எங்கள் கோரிக்கை பொறுமையாக கேட்டுக்கொண்டார்’ என கூறினார்.