ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறைத்தண்டனை: உயர்நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் உட்பட 3 அரசு அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் இவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தனக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களும், பதவி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனே வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனுவை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஞான பிரகாசத்துக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 2020-ம் ஆண்டு ஞானபிரகாசம் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஆஜரானார். அப்போது, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை கடிந்து கொண்ட நீதிபதி, உடனடியாக தனது உத்தரவை செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதன் பிறகு கூட, அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

இந்த சூழலில், கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி கடும் கோபம் அடைந்தார். அப்போது அவர், “நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? அரசு அதிகாரிகள் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அரசு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும்” என கடுமையாக பேசியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானபிரகாசம் வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, வரும் 9-ம் தேதி ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் உட்பட 3 பேரும் நீதிமன்றப் பதிவாளர் முன்பு ஆஜராக வேண்டும் என்றும், அதன் பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் தலா ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.