அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா இன்று மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் வந்த அன்வர் ராஜா கடந்த 2021 டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அன்வர் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஓராண்டுக்கு முன்னர் நீக்கப்பட்டேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறு சறுக்கலுக்குப் பின்னர் நான் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் நான் கட்சியின் அனைவருடனும் தொடர்பில் தான் இருந்தேன். “ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்” என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்” என்று கூறினார்.
அன்வர் ராஜா ராமநாதபுரத்தில் செல்வாக்கு மிகுந்த நபராக அறியப்படுகிறார். மிகச் சிறந்த சொற்பொழிவாளரும் கூட. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர். 1986 உள்ளாட்சித் தேர்தலில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அரசியலில் அடியெடுத்து வைத்த அவர் படிப்படியாக உயர்ந்து சட்டமன்ற உறுப்பினரானார். கடந்த 2001 முதல் 2006 வரை தமிழ்நாடு அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீலை தோற்கடித்து 16வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2021 டிசம்பர் 1 ஆம் தேதி இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படும் நிலையில் அதிமுக தனது பலத்தை நிரூப்பிக்க உள்ளூரில் செல்வாக்கு பெற்ற அன்வர் ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.