சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீசை என்.எல்.சி நிறுவனம் வழங்கியுள்ளது. 30 நாட்களுக்குள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க வேண்டும் என்றும் என்.எல்.சி கூறியுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனம், சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை வெட்டி எடுத்து அதன் மூலமாக மின்சார உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது அங்குள்ள சுரங்கங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்க விரிவாக்க பணிகளில் என்.எல்.சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. சுரங்க விரிவாக்கம் பரவனாறு கால்வாய் பணிக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை நெற்பயிற்களை அழித்து என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்.எல்.சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக போரட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டது. இதனால், கடலூர் மாவட்டம் என்.எல்.சி நிறுவனம் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது பரவனாறு கால்வாய் வெட்டும் பணியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் என்.எல்.சி மாவட்ட நிர்வாகம் மூலமாக வழங்கி வருகிறது.
பரவனாறு கால்வாய் அமைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வரும் நிலையில், சுரங்க விரிவாக்க பணிகளுக்காக என்.எல்.சி மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கங்கள் 1 மற்றும் 1 ஏ விரிவாக்க பணிகளுக்காக நிலம் தேவைப்படுவதாக பத்திரிகைகளில் என்.எல்.சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி அருகே உள்ள தென்குத்து, அம்மேரி, தொப்பிலிகுப்பம் உள்பட பல்வேறு கிராமங்களில் நிலம் தேவைப்படுவதாகவும் நிலத்தின் அளவு, அந்த இடத்தில் என்ன பயிர் செய்யப்பட்டுள்ளது, நிலத்தின் உரிமையாளார் பெயர் ஆகியவை நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நில உரிமையாளர்கள் மற்றும் அதனை அனுபவித்து வருபவர்கள் 30 நாட்களுக்குள் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். 30 தினங்களுக்குள் நில எடுப்பு அதிகாரிகளிடம் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு வந்தால் எந்த ஒரு ஆட்சேபனையும் ஏற்றுக்கொள்ளப்படாது. செப்டம்பர் மாதத்தில் இதற்கான நேரடி விசாரணையானது நடைபெறும். ஆட்சேபம் தெரிவிப்பவர்களிடம் அப்போது விவரம் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்தில் தீவிரம் காட்டி வருவது தெரியவருகிறது.