முன்னாள் எம்.பி கோபால் அமமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

அமமுக கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்த நிலையில், முன்னாள் எம்.பி கோபால், அமமுகவின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்க்கில் சிறைக்குச் சென்றதும், சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக சசிகலாவும், தினகரனும் வழக்குத் தொடுத்தனர். அதிமுக பொதுச் செயலாளரான தன்னையும், துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனையும் நீக்க முடியாது என கோர்ட்டில் தெரிவித்தார் சசிகலா. இதற்கிடையே தனிக்கட்சியை தொடங்கினார் டிடிவி தினகரன். சசிகலா சிறையில் இருந்தபோதே அமமுகவை தொடங்கி, அதற்குப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்தார். ஆனால், தலைவர் பதவி மட்டும் காலியாக இருந்தது. தலைவர் பதவிக்கான பொறுப்பை துணைத் தலைவரே கவனித்து வந்தார். வி.கே.சசிகலாவுக்காக ‘தலைவர்’ பதவி காலியாக வைத்திருக்கப்பட்டுள்ளதாக அப்போது டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். ஆனால், கடந்த ஆண்டு நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுகவில் சசிகலா இனி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தினகரன் தரப்பில் அப்போதே கேட் போடப்பட்டது. எனினும், மறைமுகமாக சில பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சசிகலாவுக்காக இத்தனை ஆண்டுகளாக ‘ரிசர்வ்’ செய்யப்பட்டிருந்த தலைவர் பதவி இன்று நிரப்பப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில், பொதுச் செயலாளர், தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் அமமுக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு இன்று பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமமுக தோற்றுவித்த பிறகு முதல் தலைவராக முன்னாள் எம்.பி கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதல் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும், துணைத்தலைவர் அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பியாக செயல்பட்டவர் சி.கோபால். அவர் அமமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பொதுக்குழுவில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது:-

கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோபாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்கத்துக்காக செயல்பட்டவர். கோபால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமியுடன் நட்பாகப் பழகியவர். அப்படி இருந்தும் அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லவில்லை. அவரை போலவே அவரது மகன் சோளிங்கர் பார்த்திபனும் என்னுடன் உள்ளார். அவர் தந்தை சொல்லைப் பின்பற்றக்கூடியவர். நான் கூட கேட்டேன்.. என்னால் பலன் அடைந்தவர்களே எனக்கு எதிராகச் சென்று விட்டார்கள். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களே என கேட்டுள்ளேன். இன்று நான் பொதுச் செயலாளராக தேர்வான சான்றிதழையே பார்த்திபன் தான் எனக்கு வழங்கியுள்ளார்.

அமமுக ஆறு ஆண்டுகளைக் கடந்து விட்டது. கட்சி இல்லாமலே சுயேட்சையாக ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றேன். சட்டமன்ற தேர்தலானாலும் நாடாளுமன்ற தேர்தலானாலும் தனித்து நிற்கக்கூடிய தைரியம் நமக்கு உள்ளது. அதனால் தான் தேர்தல் பின்னடைவுகள் நம்மை பாதிக்கவில்லை. கிளை இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம். நமக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. பண பலம் தான் இல்லை. ஒருநாள் நிச்சயம் மக்கள் நம்மை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள். நம்முடைய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. மதிய உணவு மட்டுமே கொடுத்துள்ளோம். ஆனால் பொதுக்குழு உறுபினர்களை தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கு என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க ஓபிஎஸ் அணியுடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் தீய சக்தியான திமுகவை வீழ்த்த முடியும். திமுகவை எதிர்க்க அம்மாவின் தொண்டர்களோடு இணைய தயார் எனச் சொன்னேன். தேர்தலில் கூட போட்டியிடமாட்டேன் என சொன்னேன். ஏதோ நான் கூட்டணிக்காக காத்திருப்பதைப் போல எண்ணினார்கள். ஆனால் இன்றைய நிலைமை என்ன? முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அவர்கள் மீதுள்ள வழக்குகளுக்காக அச்சத்தில் உள்ளார்கள். திமுகவுடன் பேரம் பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமில்லை. எப்படியாவது தமிழ்நாட்டில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை ஒழித்துவிட வேண்டும் என்பது தான் நோக்கம். இதைப் பார்த்து எல்லாம் நான் அச்சப்படப் போவதில்லை. 2026ல் நாம் தான் ஆட்சி அமைப்போம்.

கடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பாமக தயவில்லாமல் ஜெயிக்க முடியாது என உணர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கூட்டணியில் சேர்த்துக்கொண்டார். நாங்கள் தைரியமாக தனித்து போட்டியிட்டோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டு வட தமிழ்நாட்டில் எத்தனை தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது? பாமக இல்லாவிட்டால் வெற்றி பெற்றிருக்க முடியாது. கோடநாடு விவகாரத்தில் ஆர்பாட்டம் நடத்தியபோது எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவில்லை. ஆனால் அதிமுகவினர் ஏன் கோபப்பட்டார்கள். நானும், ஓ.பி.எஸ்ஸும் ஒன்றாக சேர்ந்தால் அதிமுகவினருக்கு ஏன் கோபம் வருகிறது? எங்களைத்தான் வேண்டாம் என ஒதுக்கிவிட்டீர்களே.. பிறகு ஏன் கோபம்? உங்களை வீழ்த்தாமல் ஓயப்போவதில்லை.

அதிமுகவினர் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்கள். எத்தனை நாள் கொடுக்க முடியும் என பார்க்கலாம். பணம் இருந்தும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறவில்லை. 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள். இது தான் எடப்பாடியின் தலைமை. 2006ல் திமுக ஆட்சி அமைத்தாலும் மைனாரிட்டி ஆட்சி தான் அமைக்க முடிந்தது. அது தான் ஜெயலலிதாவின் தலைமை. எடப்பாடி பழனிசாமியிடம் நான் அடைக்கலம் புகுவேன் என எதிர்பார்த்தால் அது ஒரு போதும் நடக்காது. எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை டிடிவி ஒரு போதும் மன்னிக்க மாட்டான். துரோகத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன். வரும் காலத்தில் அரசியல் அரங்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலரை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.