மணிப்பூரில் பாஜகவின் கூட்டணி கட்சியான குக்கி மக்கள் கூட்டணி, பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற வண்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் மே மாதம் தொடங்கிய வன்முறை இன்னும் நீடித்து வருகிறது. இதனால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. வன்முறையின் போது 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூரில் இன்னும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
மணிப்பூர் கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்தும் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் முறையிட்டுள்ளனர். எனினும், பாஜக முதல்வர் எந்தக் குரலுக்கும் செவிசாய்க்கவில்லை.
இந்த நிலையில், மணிப்பூரில் ஆளும் பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி கட்சி (KPA) அறிவித்துள்ளது. குக்கி மக்கள் கூட்டணிக்கு 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போதைய மணிப்பூர் மோதலைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான மணிப்பூரில் உள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது பயனற்றது. அதன்படி, மணிப்பூர் அரசுக்கு மக்கள் கூட்டணியின் ஆதரவு வாபஸ் பெறப்படுகிறது என அக்கட்சியின் தலைவர், ஆளுநர் அனுசுயா உய்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குக்கி மக்கள் கூட்டணிக்கு மணிப்பூர் சட்டசபையில் இரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். 60 எம்.எல்.ஏக்களை கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 32 உறுப்பினர்கள் உள்ளனர். ஐந்து NPF எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவும் உள்ளது. எனவே, குக்கி மக்கள் கூட்டணி ஆதரவை வாபஸ் பெறுவதால் பிரேன் சிங் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றே தெரிகிறது.