பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 13-வது நாளாக நீடித்து வரும் நிலையில், கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல் வளையமாதேவி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கடந்த 26-ந்தேதி என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியது. விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டு பரவனாறுக்கு மாற்றுப்பாதை வெட்டும் பணி நடந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற என்.எல்.சி. அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் 20 போலீசார் காயமடைந்தனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 40 ஆயிரம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் என்.எல்.சிக்கு உத்தரவிட்டது.
இது ஒருபக்கம் இருக்க பணி நிரந்தரம், சம்பளம் உயர்வு உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 13- நாட்களாக என்.எல்.சி. ஜீவா தொழிற்சங்க ஒப்பந்த தொழிலாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தொழிலாளர் நலத்துறை, என்.எல்.சி. நிர்வாகம், ஜீவா தொழிற்சங்கம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. மூன்று தரப்பில் இருந்து அவர்கள் சார்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.