மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கவுரவ் கோகோய் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார்.
மக்களவை பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியவுடனேயே பாஜக சார்பில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஒரு கேள்வியை முன்வைத்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி உரையைத் தொடங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது ஏன் கவுரவ் கோகோய் பேசுவதாகக் கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அப்போது பாஜகவினர் ராகுல் காந்தி நம்பிக்கையற்றவர் என்று விமர்சித்தனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பையும் சமாதானம் செய்து இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகோய் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். கோகோய் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்தவர் என்பதால் அவரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். தற்போது அதன் மீது முதல் உரையை ஆற்றி வருகிறார். அவர் பேசுகையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இது பலத்தை நிரூபிப்பதற்கான தீர்மானம் அல்ல. இது மணிப்பூருக்கு நீதி வேண்டிய கொண்டுவரப்பட்ட தீர்மானம்.
எதிர்க்கட்சிகள் மிகத் தெளிவாக மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி அவையில் விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், அவர் தொடர்ந்து மவுனத்தைத் தேர்ந்தெடுத்தார். அவரது மவுன விரதத்தைக் கலைக்கவே நாங்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
மணிப்பூர் விவகாரம் பற்றி 80 நாட்களுக்குப் பின்னர் வெறும் 30 விநாடிகள் மட்டுமே பிரதமர் மோடி பேசியுள்ளார். அதுவும் அவைக்கு வெளியே. மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை மத்திய அரசு ஏன் காப்பாற்ற நினைக்கிறது? வன்முறையில் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை செல்லாதது ஏன்?
நாங்கள் மணிப்பூர் சென்று கள நிலவரத்தை அறிந்துவந்துள்ளோம். பிரதமர் அவர்களே நீங்களும் மணிப்பூர் சென்றுவிட்டு கள நிலவரம் அறிந்து கொண்டு வந்து இங்கே பதிலுரை ஆற்றுங்கள். பிரதமர் நரேந்திர மோடி தனது இரட்டை இஞ்சின் அரசின் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால்தான் மணிப்பூரில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். 5000 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 6500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்திருக்க வேண்டும். கலவரம் தொடங்கிய 2 அல்லது 3 நாட்களில் அவர் அமைதியை நிலைநாட்டியிருக்க வேண்டும். மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது என்றால் அதற்கு மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லை என்றுதானே அர்த்தம்.
இவ்வாறாக கோகோய் அடுக்கடுக்கான கேள்விகளுடன் தனது உரையில் பல முக்கியத் தகவல்களை முன்வைத்தார். அப்போது மக்களவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் சன்சத் தொலைக்காட்சியில் ஏன் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி தெரிவிக்காமல் விவரத்தை இருட்டடிப்புச் செய்கிறீர்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பிரச்சினை சீர் செய்யப்பட்டது. இதனால் சிறிது நேரம் தடைபட்ட விவாதம் தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.