வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ராணுவ உயர்மட்ட ஜெனரலை திடீரென டிஸ்மிஸ் செய்துள்ள நிலையில், போருக்கு ரெடியாகவும் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். ஏவுகணை சோதனை என்ற பெயரில் வடகொரியா திடீர் திடீரென ஏவுகணைகளைத் தொடர்ச்சியாக டெஸ்ட் செய்யும். இதற்குப் பதிலடி கொடுப்பதே தென்கொரியாவின் வேலையாக இருக்கும். இதனால் சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான எல்லைகளில் ஒன்றாகவே தென்கொரியா- வடகொரியா எல்லை இருந்து வருகிறது. தென்கொரியாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதேநேரம் வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. கிம் ஜாங் உன் நினைத்தது என்ன வேண்டுமானாலும் அங்கு நடக்கும் என்பதால் அங்கு எப்போதும் ஒரு வித பதற்றமான சூழலே இருக்கும்.
இதற்கிடையே அவர் ராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலை திடீரென டிஸ்மிஸ் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போருக்குத் தயாராகும்படியும் உத்தரவிட்டுள்ளார். ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ள அவர், ராணுவ பயிற்சிகளையும் அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். கிம் ஜாங் திடீரென மீட்டிங் ஒன்றை நடத்தி அதில், வட கொரியாவின் எதிரிகளைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர் எதிரி நாடுகள் என எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லையாம்.
ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து பாக் சு இல் திடீரென டிஸ்மில் செய்யப்பட்டார். அவருக்கு பதில் ஜெனரல் ரி யோங் கில் நியமிக்கப்பட்டார். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என யாருக்கும் தெரியவில்லை. ரி யோங் கில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக யார் அந்த பதவிக்கு வருவார்கள் எனத் தெரியவில்லை. கிம் வேறு சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். குறிப்பாக ஆயுதங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்டார். கடந்த வாரம் தான் கிம் அங்குள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியிருந்தார். இதற்கிடையே ஏவுகணை, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை அதிகப்படுத்த கிம் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
அப்போது அவர் ஆய்வு நடத்தும் போது எடுக்கப்பட்ட சில படங்கள் வெளியானது. அதில் மேப் ஒன்றில் கிம் தென்கொரியத் தலைநகர் சியோல் மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளைக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கிடையே தான் போருக்கு ரெடியாகும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாடு முழுக்க தொடர்ச்சியாகப் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா நாடு நிறுவப்பட்டு வரும் செப். 9ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் ஆகிறது. அதைக் கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ள கிம், தனது நாட்டின் மெகா ராணுவ அணி வகுப்பிற்கும் திட்டமிட்டுள்ளார். அதில் பல அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
அதேநேரம் மறுபுறம் கடந்த சில காலமாகவே அமெரிக்காவும் கூட வடகொரியா பற்றி கடுமையான கருத்துகளைக் கூறி வருகிறது. அதாவது, உக்ரைன் நாட்டில் போரைத் தொடர்ந்து நடத்த ரஷ்யாவுக்கு வடகொரியா தான் ஆயுத சப்ளை செய்வதாகச் சாடியிருந்தது. இருப்பினும், இதை ரஷ்யாவும் வடகொரியாவும் மறுத்துள்ளன. இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 21 மற்றும் 24 தேதிகளில் அமெரிக்கா தென்கொரியா இணைந்து ராணுவ போர்ப் பயிற்சி மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.